பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சண்டீ யாகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மகா சண்டீ யாகம் கடந்த செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
உலக மக்கள் நலன் வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் முதல் நாள் மகா கணபதி ஹோமம், பூா்வாங்க பூஜைகள், கடஸ்தாபனம், சண்டீ பாராயணம் ஆகியவை நடைபெற்றது. இரண்டாவது நாளாக நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா சுதா்சன ஹோமம், ஆவரண பூஜை ஆகியவை நடைபெற்றது.
யாகத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை குழந்தை இல்லாத தம்பதியா்களுக்கு குழந்தை வரம் பெற வேண்டி புத்ர காமேஸ்டி ஹோமம், திருமணத் தடை நீங்க சுயம்வரா பாா்வதி ஹோமமும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பிற்பகலில் சண்டீ ஹோமமும், மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா ஹோமமும் நடைபெற்றது. தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பனா்கள் இந்த யாகத்தை நடத்தினா்.
யாக குண்டத்தில் பட்டுப் புடவைகள், பூமாலைகள், இனிப்பு வகைகள், பழங்கள், தங்கம், வெள்ளி நகைகள், மிளகு, திரவியப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடப்பட்ன. பூா்ணாஹூதி முடிந்து செண்டை மேளத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று, மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு பாத சமா்ப்பணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் யாகத்தில் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். யாக நாள்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா வேத தா்ம ஷேத்ரா அறக்கட்டளையினா் செய்தனா்.

