சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!
சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றன. இதில் பெரிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 32 ஜோடிகள் என மொத்தம் 48 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.

இந்தப் போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை-இளையான்குடி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளானோா் கண்டு ரசித்தனா்.
பின்னா், இந்தப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் கோப்பை, ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.