பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?
சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.
அப்போது பிரபலங்களின் விவாகரத்து தொடர்பாகவும் பேசியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,
"சினிமா பிரபலங்கள் இப்போது அதிகமாக விவாகரத்து பெறுகின்றனர். அதுவும் 20 வருடங்கள் வாழ்ந்தபின்னர் விவாகரத்து பெறுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.
நான் இன்றைய தலைமுறையினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும், ஈகோ இருக்கக் கூடாது. நீ பெருசா, நான் பெருசா என்ற ஈகோ இருக்கக் கூடாது. புரிதல் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை. நீ இப்படி இருந்தால் நான் அப்படி இருப்பேன் என்று இருந்தால், எப்படி குடும்பம் நடத்த முடியும்? அதற்கான உதாரணங்கள்தான் இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் பெருமையாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன். கேப்டன்தான் எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன். எனக்கென்று எந்த சுயவிருப்பமும் இல்லை. அவர் விருப்பம்தான் என் விருப்பம். அவர் செயல்தான் என் செயல். அவர் சொல்தான் என் சொல். திருமணமானபோதே என்னை நான் மாற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன். அவருக்கு கோபம் கடுமையாக வரும். நான் பொறுமையாக இருப்பேன்.
அவரே ஒரு பேட்டியில் 'என் மனைவி நிழல் சக்தி இல்லை, நிஜ சக்தி. அவள் என் மனைவி மட்டுமல்ல, என் தாய்' என்று கூறியிருக்கிறார். அந்த பேட்டியைப் பார்த்து இன்று நான் அழுகிறேன். கேப்டன் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார்.
அவருடைய சிறிய வயதிலேயே அவரின் அம்மா இறந்துவிட்டார். தாய் பாசம் அவருக்குத் தெரியாது. திருமணம் ஆனது முதல் அவர் வீட்டில் இருக்கும்போது நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன். அதனால் கணவன் - மனைவிக்குள் புரிதல் இருந்தால் இந்த விவாகரத்து எல்லாம் தூசிமாதிரி. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் அந்த திறமை இருவருக்குமே வந்துவிடும். இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இதனை என்னுடைய அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.