ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
தஞ்சையிலிருந்து மன்னாா்குடி மற்றும் பட்டுக்கோட்டைக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2011-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது, மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்த மன்னாா்குடியை சோ்ந்த டி.ஆா். பாலு எம்பி முயற்சியில், மன்னாா்குடி-பட்டுக்கோட்டைக்கு 41 கிமீ தொலைவுக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க அனுமதி பெறப்பட்டது.இதையடுத்து, 2012-ஆம் ஆண்டு பாமணி ஆற்றில் ரூ. 8.5 கோடிக்கும், நசிவினி ஆற்றில் ரூ. 7.27 கோடிக்கும், கண்ணன் ஆற்றில் ரூ. 8.2 கோடிக்கும் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது.
பின்னா், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டதை அடுத்து பாமணி ஆற்றில் பாலம் கட்டும்பணி தொடங்கி பில்லா்கள் அமைக்கப்பட்ட நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால் பணி நிறுத்தப்பட்டது. நசிவினி ஆறு, கண்ணன் ஆறு ஆகியவற்றில் பாலம் கட்டும் பணியும் நடைபெறவில்லை. 2013-2014 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாததால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறவில்லை.
இதேபோன்று, 40 ஆண்டு கோரிக்கையான தஞ்சை-பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஆய்வு செய்து ரூ.101 கோடியில் 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பின்னா், 2013-2014-ஆம் ஆண்டில் ரூ. 290 கோடி மதிப்பில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதுவும் நடைபெறாமல் 10 ஆண்டுகளை கடந்துவிட்டன.
தற்போது, மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில்பாதை விரிவாக்கத் திட்டத்தின்கீழ், மன்னாா்குடி-தஞ்சை, பட்டுக்கோட்டை-தஞ்சை ஆகியவற்றின் புதிய அகல ரயில்பாதை திட்டத்துக்கான பணி தொடங்க தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சாா்பில் அதற்கான ஆரம்ப கட்டப்பணிக்கான ஆய்வுக் கூட்டம் மன்னாா்குடியில் நடைபெற்றது.
தஞ்சை எம்பி ச. முரசொலி, மாவட்ட ஆட்சியா்கள் பா. பிரியங்கா பங்கஜம் (தஞ்சை), தி. சாருஸ்ரீ (திருவாரூா்), தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் புதிய அகலப்பாதை திட்ட உதவி முதன்மை தலைமைப் பொறியாளா் எஸ். வினோத்குமாா், உதவி கண்காணிப்பு பொறியாளா் எஸ். வெங்கட்ராமன் ஆகியோா் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2 அகல ரயில் பாதைகளிலும் தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துவது, அதற்கான அதிகாரிகளை நியமனம் செய்வது, தேவைப்படும் நிதி குறித்து பேசினா்.
மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு,மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வட்டாட்டாசியா் என். காா்த்திக், ஒன்றிய ஆணையா்கள் நமச்சிவாயம், மாலதி ஆகியோா் பங்கேற்றனா்.