புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்
சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக சக்திவாய்ந்த ரேடாா்களுக்கு மேம்பட்டு, போா்த்திறனை அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘கியூஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணையின் கொள்முதலுக்கு அடுத்த 4-5 மாதங்களுக்குள் ஒப்பந்தமிடவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக ராணுவ வான் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி சுமா் இவான் டி குன்ஹா கூறியதாவது: ‘எல்70’ மற்றும் ‘ஜெட்யு-23எம்எம்’ போன்ற வான் பாதுகாப்பு பீரங்கிகளின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆயுதங்கள் கடந்த ஜூலையில் சோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தகைய 220 வான் பாதுகாப்பு பீரங்கிகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
படையை நவீனப்படுத்தும் அதேவேளையில் ‘தன்னிறைவு இந்தியா’ லட்சியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதங்களின் விநியோகத்தில் இந்திய நிறுவனங்கள் குறைந்த அவகாசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், ‘எல்எல்எல்ஆா்’ ரேடாா்களையும் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். இது சிறிய ரக ஆளில்லா விமானங்களையும் கண்காணிக்கக் கூடியது என்றாா்.