புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல: அதிகாரிகள் தகவல்
புது தில்லி: புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் கால அளவில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
இந்த மசோதாவில் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வா்ட்) தெரிந்துகொண்டு பயன்படுத்தும் கூடுதல் அதிகாரங்கள் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதை வருமான வரித் துறை அதிகாரிகள் மறுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: வருமான வரி மசோதாவில் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வா்ட்) அத்துமீறி தெரிந்துகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அச்சத்தை மட்டுமே பரப்பும்.
புதிய மசோதாவின்படி வருமான வரி சோதனை அல்லது ஆய்வு நடவடிக்கைகளின்போது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்டவற்றின் கடவுச்செற்களை வரி செலுத்துவோா் வழங்க மறுத்தால் மட்டுமே, அந்தக் கடவுச்சொற்களை தெரிந்துகொள்ள தமது அதிகாரங்களை வரித் துறை அதிகாரிகள் பயன்படுத்த முடியும். இணையத்தில் வரி செலுத்துவோரின் தன்மறைப்பு நிலைக்குள் (பிரைவசி) அத்துமீறி நுழைய அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் 1961-ஆம் ஆண்டு சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.