புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை அமைச்சா் தொடங்கி வைத்தாா்!
அரியலூா் மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
மேலராமநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், அரியலூா் மற்றும் தஞ்சாவூரிலிருந்து ஏலாக்குறிச்சி வரை வந்து செல்லும் நகரப் பேருந்துகளை மேலராமநல்லூா் கிராமம் வரை நீடிப்புச் செய்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, அரியலூரிலிருந்து மாலை நேரங்களில் விக்கிரமங்கலம் வழியாக காரைக்குறிச்சி செல்ல பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரியலூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தை காரைக்குறிச்சி வழியாக செல்லும் வகையில் பேருந்து சேவையை விக்கிரமங்கலத்தில் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, இரும்புலிக்குறிச்சி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறைக்கு புதிய வழிதடத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம் லிட்) திருச்சி மண்டல பொது மேலாளா் ஆ. முத்துக்கிருஷ்ணன், கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா்கள் முத்துலெட்சுமி, சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.