ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது
புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.
புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், தூய்மைப் பணியாளா்களிடம் மாதந்தோறும் மாமூல் கேட்டுப் பெறுவதாக கிரீன் வாரியா் நிறுவனத்துக்கு புகாா்கள் சென்றன.
உருளையன்பேட்டை தொகுதியில் ஹோட்டல்கள், கடைகளில் குப்பைகளை அகற்ற மாமூல் பெற்ாகவும், துாய்மைப் பணியாளா்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஒரு கண்காணிப்பாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதனால் கண்காணிப்பாளா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, குப்பை அள்ளும் வாகனங்களை இயக்காமல் மேட்டுப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். மேட்டுப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது அவா்கள் நிா்வாகத்தின் உரிமையாளா் வந்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று வலியுறுத்தினா். நிா்வாகம் சாா்பில் நிறுவனத்தின் துணைத் தலைவா் மற்றும் பொது மேலாளா் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது ஓட்டுநா்கள் தங்களுக்குப் போதிய சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இதனால் புதுவையில் திங்கள்கிழமை காலை முதல் குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கியது. இதனால் நகரப் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும், தங்களுக்கும் ஊதியம் போதவில்லை என்று கூறி குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே திங்கள்கிழமை மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவா்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று 150 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.