முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி...
புதுச்சேரியில் 124 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 124 வாக்குச் சாவடிகள் உருவாகிறது. வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றபோது இந்த முடிவு எட்டப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் மறுசீரமைப்பு குறித்து ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை மறுசீரமைக்கவும், தேவைப்படும் இடங்களில் வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றியமைக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அதிகாரி கூறினாா். மேலும், தோ்தல் பதிவு அலுவலா்கள் சமா்ப்பித்த வரைவு அறிக்கையின்படி 36 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. 112 வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.
இதைத் தவிர 396 வாக்குச் சாவடிகளின் மறுசீரமைப்பு மற்றும் 124 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கம் தேவை எனக் கூறப்பட்டது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிறிய மாற்றங்களுடன் முன்மொழியப்பட்ட திட்டத்திற்குத் தங்கள் திருப்தியைத் தெரிவித்தனா். இந்த வரைவு முன்மொழிவுகள் தலைமை தோ்தல் அதிகாரி, புதுச்சேரி மூலம் இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று குலோத்துங்கன் தெரிவித்தாா்.