Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
புதுச்சேரி: அரங்கில் அணிவகுத்த பரம்பர்ய உணவுகள் - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் முந்திய 3 ராணிகள்
பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனின் 7-வது போட்டி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமல்லாமல் காலாப்பட்டு, வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/akbpvmle/0db0fd31-6717-4d39-b97f-66ec4424b8a0.jpg)
முதல் சுற்று தேர்வுக்காக சிமிலி (கேழ்வரகு மற்றும் தினை மாவில் செய்தது), சாக்லேட் பணியாரம், சாக்லேட் பாப், மஸ்க் மெலன் மஸ்தானி, கொழுக்கட்டை, பாயாசம், தேங்காய் துவையல், அரிசி நெய் இட்லி, இறால் வடை, ராகி ஸ்வீட், ஹைதராபாத் மட்டன் பிரியாணி, தினை அதிரசம், அத்திக்காய் துவையல், வெற்றிலை லட்டு, பச்சைப்பயறு பாயாசம், சீராளங்கறி, கார கொழுக்கட்டை, மீல் மேக்கர் ஃப்ரை, கேழ்வரகு இனிப்புக் கூழ், வள்ளிக் கிழங்கு கட்லெட், கோலா உருண்டை, கம்பு மாவு பணியாரம், கருப்பு கவுனி சர்க்கரைப் பொங்கல், தஞ்சாவூர் ஒரப்பு அடை, கோதுமை கிச்சடி, இறால் புட்டு, முள்ளங்கி பஜ்ஜி, சோள கொழுக்கட்டை, திருவாச்சி இலை ஊறுகாய், வாழைப்பூ அடை, கேழ்வரகு களி, வரகு கேசரி, தூதுவளை ரசம், ராகி பிரௌனி, வல்லாரை நூடுல்ஸ், ராகி குதிரைவாலி சூப், மாதுளை மாஜிட்டோ, ஸ்ட்ராபெர்ரி மில்லட் அவல் பாயாசம், மில்லட் ஃபலாஃபில், அவல் சாலட் என வித விதமாக சமைத்துக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல வந்திருந்த போட்டியாளர்களுக்கும், அவள் விகடன் வாசகிகளுக்கும் ஜாலியான பல்வேறு கலர்ஃபுல் போட்டிகள் வைக்கப்பட்டன. வித விதமாக சமைத்து எடுத்து வரப்பட்ட அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதையடுத்து டாப் 10 தேர்வாளர்களை அறிவித்தவுடன், கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. கருப்பு கவுனி அரிசி ஃப்ரௌனி மற்றும் ரசமலாய் செய்த சத்யா, வாழை குருத்து துவையல், வாழைத்தண்டு கட்லெட் மற்றும் வாழைப்பூ நெத்திலி மீன் குழம்பு செய்த இளவேனி, வரகரிசி களி மற்றும் மீன் அசட் செய்த மகாலட்சுமி, சிக்கன் கிரேவி செய்த பாத்திமா தாஹிரா, பனங்கிழங்கு அல்வா, சோற்றுக்கற்றாழை பாயாசம், தாமரை விதை புலாவ் மற்றும் திருவாச்சி இலை துவையல் செய்த முருகன், வேப்பம்பூ குழம்பு மற்றும் அத்திக்காய் பொரியல் செய்த புஷ்பா போன்றவர்களை அறிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/m2k3i2ix/WhatsApp_Image_2025_02_09_at_10_24_15_AM.jpeg)
தொடர்ந்து நெத்திலி அவியல் மற்றும் சிகப்பு அரிசி சாதம் செய்த சங்கரா கோமதி, கருப்பு உளுந்து புட்டு மற்றும் பனங்கிழங்கு அல்வா செய்த ஜெயந்தி, சம்பா கோதுமை கருப்பட்டி அல்வா, திருப்பாகம் மற்றும் பாதாம் சாக்லேட் செய்த பிரேமா உள்ளிட்டவர்களை டாப் 10 தேர்வாளர்களாக அறிவித்தார். அந்த 10 பேருக்கும் சான்றிதழ்களுடன், பரிசுகளையும் வழங்கினார் செஃப் தீனா. தொடர்ந்து அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி சமையல் டேபிளில் அந்த 10 பேரும் சமையல் செய்யத் துவங்கினர்.
சமையல் செய்யத் துவங்கிய 30 நிமிடங்களில் அரங்கமே மணமணத்தது. சுடச்சுட அவற்றை சுவைத்தார் செஃப் தீனா. நிகழ்ச்சியின் இடையே இண்டேன் கேஸ் நிறுவன அலுவலர்கள் , கேஸ் அடுப்பை பாதுகாப்புடன் எப்படி கையாள்வது என்பது குறித்தும், சிலிண்டர்களின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/2rtq0oio/05ca6081-d54d-46ba-9dc1-c6e294ff5a78.jpg)
சீரக சம்பா சிக்கன் பிரியாணி, கேரட் பன்னீர் கீர் மற்றும் கேரட் பன்னீர் அல்வா செய்த பிரேமா, கருவேப்பிலை பன்னீர் ஃப்ரை, சிக்கன் வொயிட் பிரியாணி, ஆப்ரிக்கன் பன்னீர் மசாலா மற்றும் ராகி சப்பாத்தி செய்த நீலவேணி, பன்னீர் ஆம்லெட், முருங்கை கீரை பிரியாணி, கிரீமி பனீர் செய்த குணசுந்தரி போன்ற மூவரையும் சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக அறிவித்தார். நேரடி சமையல் போட்டியில் பங்கேற்ற 10 பேருக்கு எக்ஸோ, கோல்ட் வின்னர் மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அதில் இறுதிப்போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு சக்தி மசாலா, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் மில்கி மிஸ்ட்டின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியுடன் எக்ஸோவின் ‘ஹெல்த்தி டிஃபன் சேலஞ்’ போட்டியும் நடைபெற்றது. அதில் புதுச்சேரியைச் சேர்ந்த குணசுந்தரி வெற்றி பெற்றார்.