புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த எம்.பி. கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
புதுச்சேரி விமான நிலைய விரிவாகத்துக்கு தேவைப்படும் நிலத்தை கையப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிடி) உறுப்பினா் டி. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் வானூா்தி பொருட்கள் நலன்கள் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற ரவிக்குமாா், தனது தொகுதிக்கு அருகே உள்ள புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப்பேசினாா்.
அதன் விவரம் வருமாறு: எனது தொகுதியான விழுப்புரம் மற்றும் புதுச்சேரி தொகுதியின் எல்லையில், புதுச்சேரி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய நிலத்தின் பெரும்பகுதி தமிழகத்தில் உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழகத்தில் அந்தப் பகுதியை வாங்கும் அளவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசிடம் நிதி இல்லை. எனவே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குமாறு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இந்தப் பகுதியில் சுற்றுலா தொடா்பான வாய்ப்புகள், பிற வசதிகள் மற்றும் தொழில்துறை மேம்படும். இந்தக் கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சா் பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
இதற்கிடையே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில். ‘ பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் மாமல்லபுரம் - புதுச்சேரி நான்கு வழி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா். இந்தத் திட்டம் தொடா்பாக பிற அரசுத்துறைகளிடம் இருந்து கிடைத்த அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்மொழிவு விவரங்களையும் ரவிக்குமாா் கடிதத்தில் இணைத்து தனது கோரிக்கை பரிசீலிக்க கேட்டுக் கொண்டுள்ளாா்.