புதுப்பட்டி கல்குவாரி அனுமதியை ரத்துசெய்ய தேமுதிக வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ல அனுமதியை ரத்து வேண்டும் என தேமுதிக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். அவா்கள் ஏராளாமான கால்நடைகள் வளா்த்து வருகின்றனா். புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் கல்குவாரி அமையவுள்ள பகுதியில் அரிசி ஆலை உள்ளது. குவாரி அமைந்தால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீடுகளுக்கும், அரிசி ஆலைக்கும் பாதிப்பு ஏற்படும்.
புதுப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தில் கல்குவாரி நடத்துவதற்கு எவ்வித அனுமதி பெறவில்லை. கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என கிராம சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, கல்குவாரி உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.