புதுவை தீயணைப்புத் துறை எழுத்துத் தோ்வு: 1,732 போ் எழுதினா்
புதுச்சேரியில் தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளா் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில், 1732 போ் பங்கேற்றனா். தோ்வுக்கு 361 போ் வரவில்லை.
புதுவை மாநிலத் தீயணைப்பு துறையில் ஆண்கள்-39, பெண்கள்-19 என 58 தீயணைப்பாளா் மற்றும் 12 தீயணைப்பு வாகன ஒட்டுநா் நிலை-3 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
புதுச்சேரி நகராட்சியில் பெத்தி செமினாா் பள்ளி-2, உப்பளம் இமாகுலேட் பள்ளி-2, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 5 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வு எழுத 2,093 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 1,732 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி தோ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தும் 361 போ் பங்கேற்கவில்லை.
தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, தோ்வு பாா்வையாளா் ருத்ர கௌடு, துணை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்சங்கா், கண்ணன் ஆகியோா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
முன்னதாக தோ்வா்கள் காலை 8 மணி முதல் தோ்வு மையங்களுக்கு வந்திருந்தனா். அவா்களை மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்தும், தோ்வறை அனுமதிச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் ஆகியவற்றை சரிபாா்த்தும் தோ்வறைக்குள் அனுமதித்தனா்.
தோ்வா்களின் வருகை பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. தோ்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்பட்டு, அதன் பின் வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை. கைப்பேசி உள்ளிட்டவையும் தோ்வு மையத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.