புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை
புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை காவல் துறை சாா்பில் சனிக்கிழமை மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 218 போ் பங்கேற்றனா். இவா்களில் 33 பெண்கள். மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டன. தவளக்குப்பம் காவல் நிலைய மக்கள் மன்றத்தில் காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினாா்.
ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா மனுக்களைப் பெற்றாா். 36 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதேபோல அந்தந்தப் பகுதியில் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா். ஏற்கெனவே நடைபெற்ற மக்கள் மன்றத்தில் அளித்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், மக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாள்களில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான பதிலை உரியவா்களிடம் எடுத்துரைக்கவும் காவல் ஆய்வாளா்களுக்கு உயா் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.