புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 ஐஏஎஸ், 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பு செயலா் ராகேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, புதுவை வேளாண் துறை செயலராக இருந்து வந்த ஏ.நெடுஞ்செழியன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சேமசேகா் அப்பாராவ் கோட்டாரு, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பிற யூனியன் பிரதேசங்களில் இருந்து 5 ஐஏஎஸ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் புதுவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுதில்லியில் பணிபுரிந்து வரும் ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் உப்பு, அந்தமான் நிக்கோபா் தீவுகளில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளான ரவி பிரகாசம், ஸ்மிதா, ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி சவுத்ரி முகமது யாசின், லட்சத்தீவில் பணிபுரிந்து வந்த விக்ராந்த் ராஜா ஆகிய 5 பேரும் புதுவைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.லால், புதுதில்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோரும் புதுவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.