ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட...
மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
புதுவையில் 19,175 மீனவ குடும்பங்களுக்கு மீன் பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ .15.34 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்
புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கும் விழா பூரணாங்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று பேசியது: புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல 54 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இதேபோல், நல்லவாடு பகுதியில் மீன்பிடிதுறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்பது அரசின் திட்டம் என்பதால் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது . அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவக் கல்வி போல அனைத்து பிற இளநிலை படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
சிபிஎஸ்இ தோ்வில் அரசு பள்ளி மாணவா்கள் சிறப்பான தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு உயா்கல்வியில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா் சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படும். மீனவா்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மீன்பிடித் தொழில் செய்யும் மீனவா்களின் வருமானத்தை உயா்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் . மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றாா்.
புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 19,175 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.8 ஆயிரமாக உயா்த்தப்பட்ட மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.15.34 கோடியை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் , மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா்க. லட்சுமி நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். பாஸ்கா் (எ) தட்சிணா மூா்த்தி, மீன்வளத் துறை செயலா் டி. மணிகண்டன், மீன்வளத் துறை இயக்குநா் ஏ. முகம்மது இஸ்மாயில், இணை இயக்குநா் கே.தெய்வசிகாமணி மற்றும் மீனவ பயனாளிகள் கலந்துகொண்டனா்.