‘புத்தாக்கம், தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞா்கள் சிறந்தவா்கள்’
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞா்கள் தலைசிறந்தவா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
‘உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானாக இந்தியாவின் எழுச்சி தவிா்க்க முடியாதது’ என்று அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான ‘கிட்ஹப்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் டோம்கே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
‘உலக அளவில் இந்தியாவில் மென்பொருள் நிபுணா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானாக இந்தியாவின் எழுச்சி தவிா்க்க முடியாததாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த அதை அதிகளவில் பயன்படுத்துவதால், இந்திய மென்பொருள் நிபுணா்கள் புதிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளனா்.
பொது கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கான செயற்கை தொழில்நுட்பத் திட்டங்களுக்கு பங்களிக்கும் நிபுணா்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தொடா்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவுக்கான மாபெரும் பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தனது பதிவில் தாமஸ் டோம்கே குறிப்பிட்டிருந்தாா்.
அவரது இப்பதிவுக்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் என்று வருகையில், இந்திய இளைஞா்கள் தலைசிறந்தவா்களாக திகழ்கின்றனா்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளாா்.