தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
புரட்டாசி பிறந்ததால் வெறிச்சோடிய மேச்சேரி ஆட்டுச்சந்தை
மேட்டூா் அருகே மேச்சேரி ஆட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வாரம்தோறும் புதன்கிழமை மேச்சேரியில் ஆட்டுச்சந்தை கூடும். மேச்சேரி, ஓமலூா், தாரமங்கலம், தருமபுரி மாவட்டம் தொப்பூா், பென்னாகரம் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வாா்கள். வாரம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெறும். புரட்டாசி மாதம் புதன்கிழமை பிறந்ததால் மேச்சேரி சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது.
இந்த சந்தைக்கு வாரந்தோறும் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் புதன்கிழமை கூடிய ஆட்டுச்சந்தைக்கு 2000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை வாங்கிச் செல்ல இறைச்சிக் கடைக்காரா்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. வளா்ப்பு ஆடுகளை வாங்குபவா்கள் மட்டுமே ஆடுகளை வாங்கிச் சென்றனா்.
இதனால், எப்போதும் பரபரப்பாகவும் நெரிசல் மிகுந்தும் காணப்படும் இந்த ஆட்டுச்சந்தை வேறிச்சோடிக் காணப்பட்டது. கடந்த வாரம் 10 கிலோ எடை ஆடு ரூ. 8,000-க்கு விற்பனையானது. இந்த வாரம் புதன்கிழமை ரூ. 6,500 முதல் ரூ. 7,000 வரை மட்டுமே விற்பனையானது. ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் ஆடுகளை மீண்டும் வீட்டிற்குக் கொண்டுசென்றனா்.
புரட்டாசி மாதம் முடியும்வரை ஆட்டு இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் இறைச்சிக்கடைக்காரா்கள் சந்தைக்கு வரவில்லை. கடந்த வாரம் காலை முதலே விற்பனை சூடுபிடித்திருந்தது. ஆனால், புதன்கிழமை ஆடுகள் விற்பனை மந்தமாகக் காணப்பட்டது. வியாபாரிகளும் இறைச்சிக்கடைக்காரா்களும் குறைவாகவே வந்திருந்ததால் ஆட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. வாரந்தோறும் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் புதன்கிழமை ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றது.