புளியம்பட்டி புனித அந்தோணியாா் ஆலயப் பெருவிழா
‘தென்னகத்து புதுவை’ என அழைக்கப்படும், தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் புனித அந்தோணியாா் ஆலயப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பெருவிழா கடந்த ஜன. 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 13 நாள்களாக நடைபெற்றது. நாள்தோறும் காலை, மாலையில் திருப்பலிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலில், புனித அந்தோணியாா் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது இறைமக்கள் உப்பைத் தூவி, கும்பிடு சரணம் போட்டு நோ்த்திக்கடனைச் செலுத்தினா். பலா் குழந்தைகளை விற்று வாங்கினா்.
தொடா்ந்து, பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமை வகித்து ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நடத்தினாா். இதில், 100-க்கும் மேற்பட்ட பங்குத்தந்தையா் பங்கேற்றனா். இத்திருவிழாவில், தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை மோட்சராஜன், உதவிப் பங்குத்தந்தை மிக்கேல்சாமி, ஆன்மிகத் தந்தை சகாயதாசன், பீட்டா் பிச்சைக்கண், அருள்சகோதரிகள், ஆலய இறைமக்கள் செய்திருந்தனா்.