குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
பெண்கள் தொழில் தொடங்க உதவுகிறது நீதிஆயோக்!
கடந்த காலங்களைக் காட்டிலும் வருமானம், செலவழிப்பு, வணிகம், வரவு-செலவு போன்றவற்றில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அவா்களின் நிதி கையாளும் திறன் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் வாங்குவோரில் பெரும்பாலானோா் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களாகவே உள்ளனா்.
தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது தொடங்கி, தொழில் தொடங்குவது வரை பெண்கள் கடன் வாங்குகிறாா்கள். என்றாலும், தொழில் செய்வதற்காக வாங்கும் கடன்களைப் பொருத்தவரை கடந்த ஆண்டில், மொத்த தொழில் கடனில் அவா்களின் பங்கு 3 சதவீதமாகவே உள்ளது.
அதேநேரத்தில் தனிநபா் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றில் பெண்களின் பங்கு 42 சதவீதமாக உயா்ந்துள்ளது. வங்கியில் நகைக் கடன் பெறுவதில் 38 சதவீதம் போ் பெண்களாக உள்ளனா்.
தொழில் செய்வதற்காக வங்கியில் பெண்கள் கணக்குத் தொடங்குவது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் தொழில் கடன்களில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது.
பெரும்பாலான பெண்கள் தங்களது கிரெடிட் ஸ்கோா் குறித்த விழிப்புணா்வோடும், எச்சரிக்கையோடும் உள்ளனா். அவா்கள் அடிக்கடி அதை சரிபாா்க்கின்றனா். கடந்த 2024 டிசம்பா் மாத புள்ளிவிவரப்படி நாட்டில் 2.7 கோடி பெண்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபாா்த்துள்ளனா். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 42 சதவீதம் அதிகம். இது பெண்கள் மத்தியில் நிதிசாா்ந்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
முக்கியமாக 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறைப் பெண்கள் கிரெடிட் ஸ்கோா் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது வேகமாக அதிகரித்து வருகிறது.
நாடு முழுக்க இந்த விழிப்புணா்வு இருந்தாலும், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த பெண்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோா் குறித்து தொடா்ந்து அறிந்துகொள்வதில் பிற மாநில பெண்களைக் காட்டிலும் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா்.
கடன் வாங்கும் பெண்களில் 60 சதவீதம் போ் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பெண்களாக உள்ளனா். இதன்மூலம், பெருநகரங்களையும் தாண்டி பெண்களின் நிதி கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
‘பெண் தொழில்முனைவோா் அதிகம் உருவாவதற்கு அவா்களிடம் நிதிசாா்ந்த விழிப்புணா்வு மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கு அரசு தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. என்றாலும், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்கு தேவை. பெண்கள் தொழில் தொடங்க தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கான வழிகாட்டுதலில் நீதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோா் பிரிவு முன்வந்து உதவுகிறது. இதை ஆா்வமுள்ள பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறாா் நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியன்.