உணவுத் தொழிற்சாலையில் வெடி விபத்து! 13 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்!
பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், அவசர சிகிச்சைத் துறை தலைவா் கோமதி ஆகியோா் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்தவா் ரோகிணி (40). அவா், தனது கணவா் மற்றும் இரு மகள்களுடன் திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வசித்து வந்தாா். திடீரென அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பல்நோக்கு மருத்துவத் துறை கண்காணிப்பில் இருந்துவந்த அவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலங்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவேறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், விழி வெண்படலங்கள் எழும்பூா் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பிறருக்கு மறுவாழ்வு அளித்த ரோகிணியின் உடலுக்கு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தனா்.