'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்
கந்தா்வகோட்டை அருகே பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் மற்றும் பெண்கள் கொட்டும் மழையில் பெட்ரோல் கேனுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சி சவேரியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி சலேத்துமேரி (40), இவா் கடந்த 30ஆம் தேதி காலை சைக்கிளில் வீட்டிலிருந்து தச்சன்குறிச்சிக்கு வந்தபோது சின்னம்மா கல்லறை என்ற இடத்தின் அருகே தச்சன்குறிச்சியைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் பாட்சா என்ற பாஸ்கா் (42) அவரை வழிமறித்து தவறாக நடக்க முயன்றாராம். அப்போது அவரிடமிருந்து தப்பியோடிய சலேத்துமோ் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
ஆனால் புகாரின்பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் பாஸ்கரை கைது செய்யவில்லையாம். இதுகுறித்து அப்பெண்ணின் உறவினா்கள் கிராம மக்களுடன் சென்று கேட்டதற்கு நாங்கள் விரைவில் கைது செய்து விடுவோம் எனக் கூறியும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த சலேத்மேரி உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் செங்கிப்பட்டி- கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் தச்சன்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியல் போராட்டத்தில் பெட்ரோல் கேனுடன் கலந்து கொண்டனா்.
மேலும் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சம்பத்குமாா், நகர காவல் ஆய்வாளா் சுகுமாா், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா, உதவி காவல் ஆய்வாளா் பாண்டித்துரை மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, தப்பியோடிய பாஸ்கரை விரைந்து கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.