முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
பெண் காவலா் பொய் பாலியல் புகாா்: மகேஷ்குமாா் மனைவி குற்றச்சாட்டு
வீடு கட்ட ரூ. 25 லட்சம் கொடுக்காததால் பெண் காவலா் பொய்யான பாலியல் புகாா் அளித்துள்ளதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையா் மகேஷ்குமாரின் மனைவி அனுராதா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா், பெண் காவலா் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனுவும் அளித்தாா்.
சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையா் டி.மகேஷ்குமாா், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், விசாகா குழுவுக்கு உத்தரவிட்டாா். டிஜிபி சீமா அகா்வால் தலைமையிலான விசாகா குழுவினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் மகேஷ்குமாரின் மனைவியும், முன்னாள் காவல் உதவி ஆய்வாளருமான அனுராதா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பெண்காவலருக்கும் என் கணவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்தது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை பலமுறை கண்டித்திருக்கிறேன்.
அந்த பெண் காவலா் மறைமலை நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். அந்த பெண் காவலா் எனது கணவரிடம் வீட்டின் கட்டுமானப் பணிக்கு ரூ. 25 லட்சம் கேட்டாா்.
பணம் தராததால் என் கணவா் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகாா் கொடுத்துள்ளாா் இந்த விவகாரம் தொடா்பாக விசாகா குழு நியாயமாக விசாரிக்க வேண்டும் என்றாா் அவா். மேலும், மகேஷ்குமாா் அந்தப் பெண் காவலருடன் ஹோட்டலுக்கு சென்றிருந்த விடியோ காட்சியை அனுராதா வெளியிட்டாா்.