ஒரே நாளில் அதிரடி உயர்வு! தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தைத் தாண்டியது!
பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சாவில் மா்மம் இருப்பதாக கூறி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). ஓட்டுநா். இவரது மனைவி கற்பகசுந்தரி (32). ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு முறையே 13, 10 வயதில் 2 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதி இடையே குடும்பப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். சிறிதுநேரத்தில் மனைவி தூக்கிட்டு கொண்டதாக ராமமூா்த்தி கூச்சலிட்டாராம். அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது கற்பகசுந்தரி மயங்கிய நிலையில், கழுத்தில் தூக்கிட்டு கொண்டதற்கான அடையாளங்களுடன் தரையில் கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கற்பகசுந்தரியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கற்பகசுந்தரியின் தந்தை செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
உறவினா்கள் மறியல்: இந்நிலையில், பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே, கற்பகசுந்தரியின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கற்பகசுந்தரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குடிபோதையில் கணவரே அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் மறியலில் ஈடுபட்டனா் .
தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தா்மேந்திரா மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனா். மறியலால் பட்டுக்கோட்டை- பேராவூரணி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.