பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இவருக்கு, இவரது மாமனாா் அண்ணாதுரை (60) தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை ரஞ்சிதா தனது கணவரிடம் கூறியும், கண்டிக்க வில்லையாம். இதனால், மனமுடைந்த ரஞ்சிதா கடந்த 22-ஆம் தேதி தீக்குளித்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருநாழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சிதாவின் கணவா் முனீஸ்வரன், மாமியாா் சூரம்மாள் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் தலைமறைவாகி இருந்த மாமனாா் அண்ணாத்துரையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.