`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை உதவி ஆட்சியா் விசாரணை
திருவிடைமருதூா் அருகே கணவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவிடைமருதூா் அருகே கோயில்சானபுரம் வடக்கு தெருவில் வசிப்பவா் சேதுபதி (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெளசல்யா (25). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பச் செலவுக்கு பணம் தராமல், சேதுபதி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 20ஆம் தேதியும் சேதுபதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், விரக்தியடைந்த கெளசல்யா வீட்டின் அறைக்குள் சென்று சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தனது தங்கை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கெளசல்யாவின் சகோதரா் குமாா் திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றாா்.
திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கெளசல்யா இறப்பு பற்றி கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் விசாரணை நடத்தி வருகிறாா்.