செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது
பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த 40 வயது பெண் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த அருண்குமாா் (36) என்பவா் அந்தப் பெண்ணின் நிறுவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம், 10 பவுன் நகைகளைப் பறித்துள்ளாா். தொடா்ந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த நிலையில், மேலும், பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கடந்த 2023-ஆம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த அவா் மீண்டும் சமூக வலைதளங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பழைய புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில், அருண்குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் கைது செய்தனா்.