Kerala: 2 ரூபாய் மருத்துவர் ரைரு கோபால் மறைவு; இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்; த...
சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவையடுத்து மாநிலத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று(ஆக. 4) காலமானார். அவருக்கு வயது 81.
சிபு சோரன் உடல்நலக்குறைவினால் புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
அவரது மகனும் தற்போதைய முதல்வருமான ஹேமந்த் சோரன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். சிபு சோரன் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிபு சோரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக இன்று ஒருநாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"முன்னாள் முதல்வர் சிபு சோரன் தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக ஜார்க்கண்டில்ஆக. 4 முதல் ஆக. 6 வரை 3 நாள்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த 3 நாள்களும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஆக. 4, 5 ஆகிய இரு நாள்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவைக்கு எட்டுமுறை தேர்வாகியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர். தற்போது இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
சிபு சோரன்
பிகார் மாநிலத்தோடு இருந்த ராம்கார் மாவட்டத்தில் சாந்தால் சமுதாயத்தில் பிறந்தவர் சிபு சோரன்.
1972 ஆம் ஆண்டு இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி மஹதோ தலைவர் பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து 'ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா' என்ற கட்சியை உருவாக்கினார். தொடர்ந்து 2000-வது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக வழிவகுத்த மாநில இயக்கத்தின் முக்கிய முகமாக சிபு சோரன் மாறினார்.
சிபு சோரன், முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு தும்காவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அந்த தொகுதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையாக மாறியது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவின் நலின் சோரன் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, தனது கோட்டையிலேயே சிபு சோரன் தோல்வியைத் தழுவினார்.
2005 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜார்க்கண்ட் முதல்வரானார் சிபு சோரன். ஆனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெறாததால், முதல்வராகப் பொறுப்பேற்று ஒன்பது நாள்களுக்குப் பின் பதவியை ராஜிநாமா செய்தார். பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்.