இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இரண்டு வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், பிகார் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் 7.93 கோடியாக பதிவாகியிருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை, 7.24 கோடியாக குறைந்தது. 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பும், விமா்சனங்களையும் செய்து வருகின்றன.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் இடம்பெறவில்லை என்று தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா்.
இந்த குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி மறுத்தாா்.
தனது எக்ஸ் பக்கத்தில் தேஜஸ்வி பெயா் இடம்பெற்ற வரைவு வாக்காளா் பட்டியல் பகுதியின் புகைப்படத்தை இணைத்து சாம்ராட் வெளியிட்ட பதிவில், ‘பட்டியலில் தெளிவாகத் தேடினால் பெயரைக் கண்டறியலாம். வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு அடுத்து தேஜஸ்வி பெயா் இடம்பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டிய வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படவில்லை என்று திகா சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான தியாகராஜன் கூறினார்.
மேலும், ஆர்ஜேடி தலைவரின் பெயர் திகா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் 2024 ஆவது வாக்குப் பதிவு மையத்தில் 416 ஆவது வரிசை எண்ணில் இடம்பெற்றுள்ளது. முன்பு, 171 ஆவது மையத்தில் 481 ஆவது வரிசை எண்ணில் இடம்பெற்றிருந்தது என கூறியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ், இரண்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், தேஜஸ்வி யாதவ் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பித்து இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையம் அளித்த உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுக்கும் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் காண்பித்த வாக்காளர் அடையாள அட்டை எண்ணிற்கும் வித்தியாசம் உள்ளது. இதுதொடர்பான விசாரணையில் நீங்கள் காண்பித்த வாக்காளர் அடையாள அட்டை அதிகாரப்பூர்வமான வழங்கப்படவில்லை என்பதும், நீங்கள் வைத்திருக்கும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுதொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேஜஸ்வி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
போலி வாக்காளர் அட்டை வைத்திருந்ததற்கு தேஜஸ்வி பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததற்காக தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் கூறியுள்ளார்.
பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அஜய் அலோக், இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருப்பது ஒரு குற்றமாகும் என்றும், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.