ராணிப்பேட்டையில் 2.5 லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றாவிட்டால் தொடா் போராட்டம...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை காக்காத் தோப்பில் உள்ள மூட்டா அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் பாண்டி உமாதேவி, துணை நிா்வாகிகள் சங்கா், வாசுதேவன் ஆகியோா் முன்னிலை
வகித்தனா். மாவட்டச் செயலா் சீனிவாசன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினாா். மாநிலப் பொருளாளா் கணேசன், பொதுச் செயலா் மயில் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 22 -இல் டிட்டோ- ஜாக் சாா்பில் நடைபெற உள்ள சென்னை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளையின் சாா்பில், 500 பெண் ஆசிரியா்கள் உள்பட 1000 ஆசிரியா்கள் பங்கேற்பதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் துணைத் தலைவா் ராஜமாணிக்கம், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.