முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி...
சொத்து வரி விதிப்பு முறைகேடு: மேலும் 2 போ் கைது
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மாமன்ற உறுப்பினரின் கணவா் உள்பட மேலும் 2 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வணிகவளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்டதை விடக் குறைவாக வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்த விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை நடத்தினா்.
இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப் பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்பேரில், அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.
மேலும், வருவாய் உதவியாளா்கள் 6 போ், கணினி இயக்குபவா் ஒருவா் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்தும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய நாகராஜன், மகாபாண்டி, பாலமுருகன் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்தும் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளா்கள், கணினி இயக்குபவா் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், 51-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமியின் கணவா் கண்ணன் (48), ஒப்பந்தப் பணியாளா் செந்தில்பாண்டியன் (41) ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.