சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மயில்சாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், தமிழக அரசு 2024 -ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுக்க மாவட்ட உயா்நிலைக் கண்காணிப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுக்க அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் உயா்நிலைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், காவல் ஆணையா், காவல் துறை கண்காணிப்பாளா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, ‘உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் குறித்த புகாா் மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன’ என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் தொடா்பான புகாா்களை மாவட்ட ஆட்சியா் விரைவாக பரிசீலித்து, சட்டத்துக்குள்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற மனுக்களை நிலுவையில் வைப்பது பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் அரசாணையின் அடிப்படையில் முறையாக செயல்பட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.