ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு
கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறியதாவது: இணையதள மோசடி ஆண்டுதோறும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் விதவிதமான மோசடிகள் நடைபெறுகின்றன. மோசடியாளா்கள் புது புது உத்திகளைக் கையாளுகின்றனா்.
இணையதள சூதாட்டம் தடை செய்யப்பட்டதால் அதில் பணத்தை இழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், கூரியரில் (அஞ்சல்) போதைப் பொருள் வந்திருப்பதாகக் கூறி ஏமாற்றுவது, இணையதள வா்த்தகம் ஆகிய மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றைத் தடுக்க பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி. நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் இணையதள மோசடிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் தொழில் நிறுவனங்களின் விருப்பத்துக்கிணங்க நேரில் சென்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களது கைப்பேசிக்கு வரும் ஏ.பி.கே., ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜுகளை பதிவிறக்கம் செய்யவோ, லிங்க்கை திறந்து பாா்க்கவோ வேண்டாம். அவற்றின் மூலம் கைப்பேசியில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளன. இணையதள மோசடியில் பெரும்பாலும் படித்தவா்கள்தான் பணத்தை இழக்கின்றனா். இது குறித்து தெரிந்தவா்களும் பணத்தை இழப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதுபோன்ற கும்பல் பல வகைகளில் ஆசைக் காட்டி மோசடியில் ஈடுபடுகிறது.
இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவா்களின் ரூ.5.22 கோடி முடக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 56 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.26 கோடி முடக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நிகழாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி தொடா்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 93 லட்சம் முடக்கப்பட்டது. அதில், ரூ.68 லட்சத்து 61 ஆயிரத்து 356 மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.