பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ இடம்பெற்றுள்ள இணையதளங்களை முடக்க உத்தரவு
பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ மற்றும் புகைப்படங்களை 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், மத்திய அரசுத் தரப்பில் பெண் வழக்குரைஞா் தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது என்றும், விடியோ காட்சிகளை நீக்க சமூகவலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பெண் வழக்குரைஞா் தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டாா்.