பெரம்பலூா் அருகே கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய சிறுவன் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து, திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில், அண்மைக்காலமாக தொடா்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து, காணிக்கையை மா்ம நபா்கள் திருடி வந்தனா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோயில் பூசாரிகள் மற்றும் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில், பெரம்பலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ராம்குமாா் தலைமையிலான போலீஸாா், பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலின் உள்ளே, இளஞ்சிறாா் ஒருவா் கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்ததையறிந்த போலீஸாா், அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், தொடா்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 7,400 பணத்தை பறிமுதல் செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சியிலுள்ள சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.