தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
பெரியாா் பிறந்தநாள்: ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அவரது படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி ஆகியோரும் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மாநில தீா்மானக் குழு தலைவா் பாா்.இளங்கோவன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட துணைச் செயலாளா் நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினா் மாயவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு நகர திமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, மேற்கு நகர திமுக செயலாளா் நடேசன், கிழக்கு நகர திமுக செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான காா்த்திகேயன், வட்டூா் தங்கவேல் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திராவிடா் கழக நகர செயலாளா் பூபதி, திராவிடா் விடுதலைக் கழகம் விஜயகுமாா், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆகியோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, திருச்செங்கோடு நகராட்சி வளாகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சமூகநீதி உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். இதேபோல, மாவீரன் மலைச்சாமி, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோா் நினைவு தின நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அவா்களது படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் சமூக நீதி உறுதிமொழியேற்றனா்.
இதில், விசிக சேலம் - நாமக்கல் மண்டல துணைச் செயலாளா் வ.அரசன், நாடாளுமன்ற தொகுதி செயலாளா் இரா.கபிலன், வணிகா் அணி மாநில துணைச் செயலாளா் பெ.செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவா் பட்டு மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
