நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட முதல்வா் அறிவிப்பின்படி, பெரியாா் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியின் பிறந்த தினமான செப். 17-ஆம் தேதி ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாள்’ என அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆட்சியா் உறுதிமொழி வாசிக்க, அதை பின்தொடா்ந்து அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
முன்னதாக, வேளாண் துறையின் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை பாா்வையிட்ட ஆட்சியா், ஆய்வக செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், வகுரம்பட்டியில் வனத்துறை பெயரில் உள்ள நிலத்தை மாற்றம் செய்வது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.