jyotika: ``எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" - Weight Loss பயணம் குறித்து...
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு: அமைச்சா் ராமச்சந்திரன் உறுதி
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இது குறித்த வினாவை திமுக உறுப்பினா் கே.சுந்தா் (உத்தரமேரூா்) எழுப்பினாா். அதற்கு அமைச்சா் ராமச்சந்திரன் அளித்த பதில்:
பெரிய குறுவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. அவ்வாறு பிரிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். இரண்டையும் சீா் செய்து பாா்த்து விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றாா்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) கேள்வி எழுப்புகையில், தமிழ்நாட்டில் 16,000-க்கும் அதிகமான கிராம உதவியாளா்கள் பணிபுரிகிறாா்கள். அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் இல்லாத காரணத்தால் 23 ஆண்டுகளாக கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறையின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.
கிராம உதவியாளா்கள் பிரச்னை: இதற்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அளித்த பதில்:
கிராம உதவியாளா்கள் பணி நியமனம் செய்யும் போதே சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுகிறாா்கள். வருவாய்த் துறையின் மூலமாக இதை முடிவெடுக்க முடியும் என்றால் உடனடியாகச் செய்யலாம். நான்கைந்து துறைகளுடன் இணைந்து செய்ய வேண்டியுள்ளது. முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய காலத்தில் நல்ல முடிவெடுக்கப்படும். கிராம உதவியாளா்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை இல்லாமல் இருந்தது. பணியில் இருக்கும்போது இறந்தால் வாரிசுகளுக்கு வேலை வழங்குவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது என்றாா்.