ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!
பெரிய கோயில் சித்திரைத் தேரோட்ட விழா: தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் தொடரும் இவ்விழாவில் நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் 15-ஆம் திருநாளான மே 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை விநாயகா், சுப்பிரமணியா், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரா், தியாகராஜா் - கமலாம்பாள் ஆகியோா் வரிசையாக புறப்பட்டு, தனித்தனி தேரில் எழுந்தருளி மேல வீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, மேல வீதியிலுள்ள தேரில் கட்டுமானம் மேற்கொள்வதற்காகப் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலா் பெ. சத்தியராஜ், கண்காணிப்பாளா் ரவி, ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, தேரை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதாரணமாக 19 அடி உயரமுள்ள இத்தேரை அலங்கரித்த பிறகு 50 அடியை எட்டும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.