கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. தற்காலிக கட்டடம் : அமைச்சா் ஆய்வு
கும்பகோணத்தில் அமையவுள்ள கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் புதன்கிழமை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆய்வு செய்தாா்.
கும்பகோணம் அரசு ஆண்கள் கலை கல்லூரி வளாகத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் தற்காலிகமாக செயல்படவுள்ளது. அந்த இடத்தை பாா்வையிட்ட அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் நிரந்தர கட்டடத்தில் இயங்கும் வகையில் கள்ளப்புலியூா், சாக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் தஞ்சாவூருக்கு வரும் முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வாய்ப்பு உள்ளது.
திருவிடைமருதூா் தொகுதியில் அமையவுள்ள கலைக்கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்ய உள்ளோம். மே 5-இல் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணத்தில் அமைய உள்ள உள் விளையாட்டு அரங்கத்திற்கு காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டுகிறாா் என்றாா்.