தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!
பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா கடந்த பிப். 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க : டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?
இந்த நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா சாப்பிட்ட உறுப்பினர் ஒருவர், அங்கேயே எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பேரவைத் தலைவர் சதீஸ் மஹானாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட பேரவைத் தலைவர் இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக உறுப்பினர்களிடம் இதைப் பற்றி பேசினார்.
“பேரவைக்குள் எச்சில் துப்பிய எம்எல்ஏ யாரென்று விடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவரின் பெயரைச் சொல்லி அவமானப்படுத்த விரும்பவில்லை.
இதுபோன்ற செயலில் யாரேனும் ஈடுபடுவதை மற்றவர்கள் கண்டால், அவர்களை தடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். பேரவையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு.
சம்பந்தப்பட்ட உறுப்பினரே என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து ஒப்புக்கொண்டால் நல்லது. இல்லையெனில், அவரை நானே அழைப்பேன்” எனத் தெரிவித்தார்.