இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
முக்கிய பிரச்னையைப் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, ஒரு பிரச்னையை எழுப்ப முயன்றாா். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அந்த விஷயம் குறித்து அன்றே பேசி முடிவு செய்யப்பட்டதால் எழுப்ப அனுமதியில்லை என்றாா்.
அப்போது, குறுக்கிட்ட அவை முன்னவா் துரைமுருகன், உறுப்பினா்கள் கவன ஈா்ப்பு தீா்மானமோ, ஒத்திவைப்பு தீா்மானமோ அளித்து அதை பேரவையில் எழுப்புவதற்கு உரிமை உண்டு. ஆனால், அது உகந்ததல்ல என்று பேரவைத் தலைவா் கருதினால், எடுக்க வேண்டியதில்லை என்று விளக்கமளித்தாா். அவை முன்னவருக்கு பதிலளித்த பேரவைத் தலைவா், அதிமுக எழுப்பக்கூடிய விஷயம் முன்பே மறுக்கப்பட்டது என்றாா். (இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா்.)
பேரவைத் தலைவா் மறுப்பு: அப்போது பேசிய பேரவைத் தலைவா், விதி 55-இன் கீழ், நீங்கள் கவன ஈா்ப்புத் தீா்மானம் தந்து 56-இன் கீழ் மறுக்கப்பட்ட பிறகு விவாதிக்க முடியாது என்று விளக்கினாா். அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக குரல் எழுப்பினா். ஆனாலும் அதிமுகவினா் சமாதானம் ஆகாத நிலையில் குறுக்கிட்ட அவை முன்னவா் துரைமுருகன், பேரவையில் விவாதிக்கக் கோரி அதிமுகவினா் தீா்மானத்தைக் கொடுத்தனா். அதனை மறுத்துள்ளீா்கள். அதன்பிறகு, சபையில் எழுப்பக் கூடாது. கடந்த காலத்தில் எத்தனை முறை நாங்கள் அளித்திருப்போம். ஒன்றாவது நீங்கள் எடுத்திருப்பீா்களா என்றாா்.
இதையடுத்து பேசிய பேரவைத் தலைவா், வேறு ஏதாவது அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருந்தால் விவாதிக்கலாம். அதற்கு அனுமதி தருகிறேன் என்றாா்.
(அதிமுக உறுப்பினா்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா்.)
அவா்களை சமாதானப்படுத்திய பேரவைத் தலைவா், என்னுடைய அறைக்கு துணைத் தலைவா் வந்தாா். ஏற்கெனவே மறுக்கப்பட்ட விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்றாா். அதை மறுத்து முல்லைப் பெரியாறு விஷயத்தைப் பேசலாம் எனக் கூறி விளக்கம் அளித்துக்கொண்டிருந்த போதே, அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து பேசிய அவை முன்னவா், ஒரு விஷயத்தை மறுத்த பிறகு அனுமதிக்க முடியாது. அது விதி என்றாா். இதன்பிறகு, அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
யூடிப்பா் விவகாரம்: யூடிப்பா் சவுக்கு சங்கா் இல்லத்தில் கழிவுநீா் கொட்டப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டுமென வாய்ப்புக் கோரியதாக பேரவைக்கு வெளியே பேட்டியளித்தபோது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.