பேருந்து மோதி மனைவி பலி; கணவா் காயம்
முத்துப்பேட்டையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மன்னாா்குடி வட்டம், மேலகண்டமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மனைவி சரண்யா (36). இவா்கள், முத்துப்பேட்டை அருகே பேட்டை கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்தனா். பின்னா், வீட்டுக்கு திரும்பியபோது, முத்துப்பேட்டை பங்களாவாசல் பேருந்து நிறுத்தம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் சரண்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இளங்கோவன் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
முத்துப்பேட்டை போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநா் சுதாகா் என்பவரை கைது செய்தனா்.