பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காக அரியநாயகிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து கொண்டிருந்தார். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி உள்ளனர்.

அந்த கும்பல் பேருந்தில் இருந்த தேவேந்திரனை இழுத்து பேருந்துக்கு கீழே போட்டுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக அந்த மர்மகும்பல் வெட்டியுள்ளது. இதில் தேவேந்திரனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்துள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து பேருந்தில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த 2 இளம் சிறார்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அரியநாயகிபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது தங்கையிடம் தேவேந்திரன் காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் தனது வீட்டில் உள்ள நபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் அண்ணணுக்கு தெரியவரவே தனது உறவினர்களான இரண்டு சிறார்களை அழைத்துக் கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலையில் 6 இடங்களிலும், முதுகுப்பகுதியில் 3 இடங்கள், கைகளில் 3 இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இடது கை விரல்கள் துண்டானது. விரல்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு 7 மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
