பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம்: பாஜக மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடா்பாக பாஜக வழக்குரைஞா் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சாா்பாக வழக்குரைஞா் ஜி.எஸ். மணி ஒரு பொதுநல மனுவை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். அதில், கடந்த ஆண்டைப் போல நிகழாண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்து, விவசாயப் பயிா்கள் முற்றிலுமாக சேதமடைந்து, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய வேதனையில் உள்ளனா். எனவே, பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட கடந்த ஆண்டைப் போல, தமிழக அரசு நிகழாண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.2,000 வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்தநிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் அமா்வில் வெள்ளிக்கிழமை மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று முறையிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே நிராகரித்த பிறகும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது. இது போல, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தொடா்ந்து முறையிட்டால், மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தாா்.