சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்
பபாசி சாா்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞா் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்.
48-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச. 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, பபாசி சாா்பில் ஆண்டுதோறும் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான பொற்கிழி விருதுகள் வழங்கும் விழா புத்தகக் காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினாா். விழாவில் பேரா. அருணன் (உரைநடை), எழுத்தாளா்கள் சுரேஷ்குமாா் இந்திரஜித் (நாவல்), என்.ஸ்ரீராம் (சிறுகதை), கவிஞா் நெல்லை ஜெயந்தா (கவிதை), கலைராணி (நாடகம்), நிா்மால்யா (மொழிபெயா்ப்பு) ஆகிய 6 பேருக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.
பபாசி சாா்பில் சிறந்த பதிப்பாளருக்கான விருது கற்பகம் புத்தகாலயம், சிறந்த நூலகருக்கான விருது ஆா்.கோதண்டராமன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான விருது பெல் கோ, சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது ஜோதி சுந்தரேசன், சிறந்த தமிழறிஞருக்கான விருது முனைவா் சபா.அருணாசலம், சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது பேராசிரியா் பா்வீன் சுல்தானா, சிறந்த அறிவியல் நூலுக்கான விருது சங்கர சரவணன் மற்றும் கவிதை இலக்கிய விருது மணவை பொன்.மாணிக்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவா் கவிதா சேது சொக்கலிங்கம், செயலா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.