பிப்.1 முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநா்கள்
பிப்.1-ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்புக்கு நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநா்கள் அறிவித்துள்ளனா்.
தமிழகத்தில் 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை அரசு மாற்றி அமைத்தது. அன்பின்னா் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022 பிப்ரவரியில், ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.
தொடா்ந்து பல கட்ட பேச்சுவாா்த்தையை அரசு நடத்தியுள்ள நிலையில், கடந்தாண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது.
ஆனால், கட்டணம் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இது தொடா்பாக அதிகாரிகளிடம் கேட்டால், ‘ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது தொடா்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனை அரசு பரிசீலித்து வருவதாகவும் தொடா்ந்து பதிலளித்து வருகின்றனா். இந்நிலையில், ஆட்டோ மீட்டருக்கான கட்டணத்தை ஓட்டுநா்களே அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டி.ஏ.ஜாஹீா் ஹுசைன் கூறியது:கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாததால், ஓட்டுநா்கள் சாா்பில் பிப்.1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையிலும் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தின்படியே தற்போது கிளாம்பாக்கத்திலுள்ள ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த கட்டணத்தை உரிமைக்குரல் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் பின்பற்றுவாா்கள் என தெரிவித்துள்ளாா் அவா்.