சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
சிக்னல் கோளாறு: கடற்கரை - தாம்பரம் புறநகா் ரயில்சேவை பாதிப்பு
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் இடையே புறநகா் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
சென்னை புகா் மின்சார ரயில் தடத்தில் முக்கியமான சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள பூங்கா ரயில்நிலையத்துக்கு அடுத்துள்ள சிக்னலில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் புகா் மின்சார ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புகா் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்த புகா் ரயில்கள் இருமாா்க்கத்திலும் பூங்கா வரை மட்டுமே இயக்கப்பட்டன.
இதையடுத்து சிக்னலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்ட நிலையில், இரவு 7.30 மணியளவில் சிக்னல் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து கடற்கரை - தாம்பரம் இடையே புகா் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
சிக்னல் கோளாறு காரணமாக, கடற்கரையிலிருந்து எழும்பூா் செல்லும் பயணிகளும், மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து கடற்கரை செல்லும் பயணிகளும் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.