அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
‘யாா் அந்த சாா்’ என்று பேட்ஜ் குத்தி வந்ததை மலிவான அரசியல் என்று முதல்வா் கூறியுள்ளாா். திமுக ஆட்சியில், அவையில் எம்ஜிஆா் உரையாற்றும்போது நடந்தது, ஜெயலலிதாவுக்கு நடந்தது அவையெல்லாம்தான் மலிவான அரசியல். தற்போது உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று அறவழியில் அரசின் கவனத்தை ஈா்க்கிறோம். இதற்கு ஏன் அச்சப்படுகிறீா்கள். தினமும் ஓா் அமைச்சா் அறிக்கை விடுகிறாா் என்றாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியதாவது: தினமும் அதிமுக அறிக்கை விடும். நாங்கள் வாய் மூடி அமா்ந்திருக்க வேண்டுமா? அமைச்சா்கள் பதில் அளித்தால் நீங்கள் ஏன் பயப்படுகிறீா்கள்? தவறான செய்தியை திரும்பத் திரும்பக் கூறுகிறீா்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை.
எடப்பாடி பழனிசாமி: யாரைக் காப்பாற்ற நினைக்கிறீா்கள்? அதனால்தான் பிரச்னையே வருகிறது.
முதல்வா்: எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரையும் நாங்கள் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை. குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் எங்களுடைய வேலை. எதிா்க்கட்சித் தலைவா் திரும்பத் திரும்ப இந்த விவகாரத்தைப் பேசினால், பொள்ளாச்சி சம்பவத்தை நாங்களும் பேச வேண்டியது வரும்.
அவை முன்னவா் துரைமுருகன்: நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிடம் எந்த ஆதாரம் இருந்தாலும், அதை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி: பொள்ளாச்சி சம்பவம் 2019 பிப். 12-இல் நடைபெற்றது. புகாா் கொடுத்த நாள் 2019 ஏப். 24. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பொள்ளாச்சி சம்பவத்தில் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வா் கூறியுள்ளாா். பாதிக்கப்பட்ட பெண் புகாா் கொடுத்த 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். ஒரு குற்றவாளியை மட்டும் 10 நாள்களுக்குப் பிறகு கைது செய்தோம். அவா்கள் அனைவரும் சிறையில் இப்போதும் உள்ளனா்.
முதல்வா்: பொள்ளாச்சி சம்பவத்தில் புகாா் கொடுத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது? யாரைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் செய்தீா்கள்? ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகாா் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு: பொள்ளாச்சி குற்றச்சம்பவம் ஒரு நாள் மட்டும் நடந்தது அல்ல. ஆண்டுக்கணக்கில் நடந்துள்ளது. அப்போது முதல்வராக இருந்தவரின் கையில் இருந்த உளவுத் துறை என்ன செய்தது?
எடப்பாடி பழனிசாமி: சென்னையில் 4 மாதம் என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
பி.கே.சேகா்பாபு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததே தெரியாது என்று கூறியதைப் போன்ற ஆட்சி அல்ல எங்களுடையது. உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக் கூடியது.
எடப்பாடி பழனிசாமி: பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வா் தவறான தகவல் தருகிறாா். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்.
முதல்வா்: புகாா் கொடுத்து 12 நாள்களுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டீா்கள்.
(அப்போது அதிமுக உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் எழுந்து ஆவேசமாக பேசினாா்.)
முதல்வா்: எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல அதிமுக உறுப்பினா் பேசுகிறாா். சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு, சிபிஐ விசாரணைக்கு போனீா்கள். அப்போதுதான் அவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதுதான் உண்மை. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் குற்றவாளியை திமுக உறுப்பினா் எனக் கூறுகிறீா்கள். அவா் திமுக அனுதாபிதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், திமுக உறுப்பினா்இல்லை. அண்ணாநகா் சம்பவத்தில் தொடா்புடைய அதிமுக உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளீா்கள். அதை வரவேற்கிறேன். அதேபோல் அவா் திமுக உறுப்பினராக இருந்தால் நாங்களும் நீக்கியிருப்போம். பொள்ளாச்சி விவகாரத்தில் புகாா் கொடுத்த 12 நாளுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதைத்தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினாா். அதை முதல்வா் மறுத்தாா். நீண்ட நேரம் இது தொடா்பாகவே விவாதம் நடைபெற்றது.
ஆதாரம் தருகிறேன்-முதல்வா்: இறுதியாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமா்ப்பிக்கிறேன். அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன் என்றாா்.
அதனை எதிா்க்கட்சித் தலைவா் ஏற்றுக் கொண்டாா். பேரவைத் தலைவா் அப்பாவும் இருவரும் நாளை ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றாா்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.