பொங்கல் நாளில் வழிபட...
வேடர் குலத்தைச் சேர்ந்த வீரன் கிழங்குகளைக் கிள்ளும்போது, வீரை மரத்தடியில் இருந்த பெரிய புற்றில் வள்ளிக்கிழங்கு கொடியைப் பார்த்தான். அதனை கிள்ளி எடுக்கத் தன்னிடமிருந்த ஆயுதத்தை கீழே போட்டபோது, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைப் பார்த்து மயக்கம் அடைந்தான் வீரன். இதைக் கவனித்த வேடனின் நாய் விவரத்தை ஓடிச் சென்று வேடனின் மனைவிக்கு குறிப்பால் உணர்த்தியது.
அவள் பதைப்புடன் வந்தபோது, தன் கணவன் மயக்கமுற்றதையும், வீரை மரத்தடியில் சிவலிங்கம் காயம்பட்ட நிலையில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கண்டு இறைவனை வேண்டினாள். உடனே கண் விழித்தான் கணவன்.
நோய் தீர தல யாத்திரை செய்து முகாமிட்டிருந்த சோழ மன்னன் கண்டன் இதையறிந்து அங்கு வந்தபோது, வெண்குஷ்ட நோய் நீங்கியது.
சுகுண பாண்டிய என்ற மன்னன் இங்கே வருகை தந்து, சுவாமியை வழிபட்டபோது, "வீரை மரமானது பலா மரமாக மாறுமோ?' என நினைத்தபோது, அவ்வாறே நடந்தது.
பாண்டிய மன்னன் அவையில் வழக்குக்குச் சாட்சியாக அந்தணர் கோலத்தில் சுவாமி வந்து, பொதிசோறு உண்டார். அதுநாள் முதல் இந்தக் கோயிலில் புழுங்கல் அரிசியே படைக்கப்படுகிறது. விவசாயம் செழிக்க, தைப் பொங்கல் திருநாளில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள சுவாமி வீரசேகரசுவாமி என்றும் அம்பாள் உமையாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
விநாயகர், மகிழமரத்தடியில் கோட்டை முனீஸ்வரர், அக்னி விநாயகர், சுப்பிரமணியர், துவார பாலகர், நடராஜர், 63 நாயன்மார்கள், சோமாஸ்கந்தர். சரஸ்வதி, மகாலட்சுமி, ஈசான்யத்தில் இரட்டை வாகனத்துடன் மகாபைரவர், நவநாயகர்கள், நர்த்தன கணபதி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட சந்நிதிகளும், திருக்குளமும், தீர்த்த மண்டபமும், திருமாட வீதியும் உள்ளன.
எட்டாம் நூற்றாண்டு நெட்டெழுத்துகள், வட்டெழுத்துகள், 12}ஆம் நூற்றாண்டில் வானதிராயர்கள் திருப்பணி உள்ளிட்ட கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.
காரைக்குடி} அறந்தாங்கி சாலையில் சுமார் 17.கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.